search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சகோதரர்கள் மோதல்"

    மனநலம் பாதித்த சகோதரர்கள் மோதியதில் அண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவம் நீடாமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கூத்தாநல்லூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கருவேலங்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் கன்னையன். இவருக்கு முத்துவேல், குருமணி, பாலமணி, பாலையா (வயது 50) மதன்குமார் (48) ஆகிய 5 மகன்களும், சாந்தி, மாலா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    இதில் பாலையா, மதன் குமார் ஆகியோர் மனநலம் பாதித்த நிலையில் இருந்து வந்தனர். மதன் குமாருக்கு சித்ரா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மதன் குமார் மனநலம் பாதித்த நிலையில் அடிக்கடி தகராறு செய்து வந்ததால் சித்ரா கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் பாலையாவும், மதன்குமாரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். எதிர் வீட்டில் சாந்தி, மாலா ஆகியோர் திருமணமாகி தங்கள் கணவன்-குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பாலையாவுக்கும், மதன்குமாருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்து இருவரும் ஒருவரையொருவர் கைகளால் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

    ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த மதன்குமார், வீட்டில் கிடந்த மண்வெட்டியை எடுத்து பாலையா தலையில் பலமாக தாக்கினார். இதில் பலத்த அடிபட்ட பாலையா, ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் கொலை நடந்ததால் அக்கம் பக்கத்தில் வெளியே தெரியவில்லை. இதற்கிடையே இன்று காலை எதிர் வீட்டில் வசித்து வந்த சித்ரா வீட்டுக்கு வந்து பார்த்த போது பாலையா பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து தேவங்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனிசாமி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். பாலையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த கொலை தொடர்பாக மதன்குமாரை போலீசார் கைது செய்தனர்.
    ×